திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை, பாதுகாப்பு, ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி
திருப்பூரில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசோதனை, பாதுகாப்பு, ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சிஐடியு சார்பில் 7 இடங்களில் திருப்பூரில் ஏழு மையங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று தாக்குதலுக்கு இடையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் தூய்மைப் பணியாளர்களும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 2 லட்சம் தூய்மைப் பணியாளர்களில் உள்ளாட்சி நிர்வாகங்களில் நிரந்தரம் செய்யப்பட்ட பணியாளர்கள் குறைந்த அளவே உள்ளனர். இதில், பெரும்பான்மையானவர்கள் தினக்கூலி தொழிலாளர்களாக நாளொன்றுக்கு ரூ.400 என்ற ஊதியத்துடன் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கரோனா நோய்த் தாக்கத்தில் சென்னை, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலை செய்யும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்வதுடன், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். 

தினக்கூலி பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 7 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி கருவம்பாளையம், அவிநாசி சாலை மற்றும் அனுப்பர்பாளையம் மற்றும் பல்லடம் நகரம் ஆகிய 4 இடங்களில் காலை 6 மணிக்கு இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில், சிஐடியூ மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி உள்பட ஊரக உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் பெருந்திரளானோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, நெருப்பெரிச்சல், திருமுருகன் பூண்டி, முருகம்பாளையம் ஆகிய இடங்களிலும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த 7 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 500க்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com