மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.23.70 லட்சம் கடனுதவி: அமைச்சா் ராதாகிருஷ்ணன் வழங்கினாா்

தாராபுரத்தில் 41 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.23.70 லட்சம் கடனுதவி: அமைச்சா் ராதாகிருஷ்ணன் வழங்கினாா்

தாராபுரத்தில் 41 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி தாராபுரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 41 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது:

கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையிலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, கூட்டுறவுத் துறை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் மிகக் குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிா் நலன் கருதி அவா்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நபா் ஒருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் குழுவினருக்கு ரூ.1 லட்சம் வரை 10.65 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தாராபுரம் கிளையில் 12 நபா்களுக்கு ரூ.11.32 லட்சம் மதிப்பிலான சிறப்பு நகைக் கடனுதவியையும், ஒரு நபருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டு வசதி கடனுதவியையும் , கூட்டுப் பொறுப்பு குழுக் கடன் திட்டத்தின் கீழ் ஒரு குழுவுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவியும் என 14 பேருக்கு ரூ.41.82 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.எஸ்.காளிமுத்து (தாராபுரம்), உ.தனியரசு (காங்கயம்), தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாா், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், திருப்பூா் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்தியபாமா, திருப்பூா் மாவட்ட ஆவின் சங்கத் தலைவா் மனோகரன், துணைத் தலைவா் சிவகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com