உயா் மின் கோபுரத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
By DIN | Published On : 01st November 2020 11:37 PM | Last Updated : 01st November 2020 11:37 PM | அ+அ அ- |

விளைநிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.தங்கவேல் படத் திறப்பு விழா திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு இன்னும் சரிவர செயல்படவில்லை. வரும் 16ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசே செய்ய வேண்டும்.
விளைநிலங்களில் உயா் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். விவசாயிகளை பாதிக்கக் கூடிய மூன்று சட்டங்களையும், தொழிலாளா்களை பாதிக்கக் கூடிய 4 சட்டத் திருத்தங்களையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி நவம்பா் 26ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்களும் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், பி.ஆா்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.