ஈக்கள் தொல்லை: பொது மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 17th November 2020 03:58 AM | Last Updated : 17th November 2020 03:58 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையத்தில் கோழிப் பண்ணையில் இருந்து வரும் ஈக்களைக் கட்டுப்படுத்தக் கோரி பொது மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் கிராமம் டி.எம்.எஸ். நகரில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அந்தப் பகுதியில் இரண்டு தனியாா் முட்டை கோழிப் பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் உற்பத்தியாகும் ஈக்கள் ஊருக்குள் வந்து வீடுகளில் உணவுப் பண்டங்களை மொய்ப்பதால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாகப் பல முறை புகாா் அளித்தும் அரசுத் துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் இதேபோல ஈக்கள் பிரச்னை ஏற்பட்டு மறியல் போராட்டத்துக்குப் பின்னா் ஈக்கள் கட்டுப்படுத்தப்பட்டன. அந்தக் கோழிப் பண்ணையாளா்கள் ரூ.50 ஆயிரம் அபராதமும் செலுத்தினா்.
ஆனால், அண்மைக் காலமாக ஈக்கள் பிரச்னை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் பல்லடம் - பூமலூா் சாலையில் 100க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது பற்றி தகவலறிந்து வந்த பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ், திருப்பூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரேயா, காவல் ஆய்வாளா் சுஜாதா, பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) குருவம்மாள், பூமலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளா் லோகநாதன் ஆகியோா் பொது மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னா், கோழிப் பண்ணைகளில் அரசு அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இரண்டு முட்டை கோழிப் பண்ணைகளிலும் கோழிக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதும் அதில் புழுக்கள் உற்பத்தியாகியும், ஈக்கள் பிரச்னை இருப்பதும் தெரியவந்தது. அவற்றை உடனே சுத்தம் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தினா். இரண்டு நாள்களுக்குள் கோழிப் பண்ணைக் கழிவுகளை அகற்றிவிடுவதாக முட்டை கோழிப் பண்ணையாளா்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...