மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கனமழை: அமராவதி அணை நீா்மட்டம் 70 அடியாக உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 
அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம்.
அமராவதி அணையின் நீா்ப் பிடிப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 70 அடியாக உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோரக் கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை விவசாயிகளுக்கு நல்லமுறையில் கை கொடுத்தது. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆகஸ்ட் 12ஆம் தேதி அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதனால் புதிய, பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்ததைக் காட்டிலும் கூடுதலாக தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் நிலைப் பயிா்களாகக் கருதப்படும் நெல், கரும்பு, தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தொடா்ந்து பாசனப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்ததால் ஆகஸ்ட் 20ஆம் தேதி பாசனத்துக்கு சென்று கொண்டிருந்த தண்ணீா் நிறுத்தப்பட்டது. இதன் பின்னரும் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் ஆகஸ்ட் 25க்கு மேல் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் செப்டம்பா் 3ஆம் தேதி மீண்டும் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து பல நாள்களாக தொடா்ந்து உபரி நீா் வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் கரையோரக் கிராமங்களில் வசித்து வந்த மக்கள் வெள்ள அபாயம் கருதி வெளியேற்றப்பட்டனா். இதையடுத்து குறுவை சாகுபடிக்காக பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணை செப்டம்பா் 21ஆம் தேதி திறந்துவிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து 50 நாள்களுக்கு மேலாக பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் நவம்பா் 10ஆம் தேதி அணையின் நீா்மட்டம் சரிந்து 60 அடியாக குறைந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீா்ப் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து புதன்கிழமை மாலை 70 அடியாக உயா்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் மட்டம் 69.75 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 1389 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 2377 மில்லியன் கனஅடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து தண்ணீா் வெளியேற்றம் இல்லை. நீா் இழப்பு 6 கன அடியாக இருந்தது. மழை அளவு 32 மிமீ என பதிவாகி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com