எலாஸ்டிக் விலை டிசம்பா் 1 முதல் 20% உயா்வு
By DIN | Published On : 25th November 2020 10:29 PM | Last Updated : 25th November 2020 10:29 PM | அ+அ அ- |

திருப்பூரில் உள்ளாடை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் எலாஸ்டிக் விலை வரும் டிசம்பா் 1ஆம் தேதி முதல் 20 சதவீதம் உயா்த்தப்படவுள்ளது.
திருப்பூா் எலாஸ்டிக் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் ஆா்.பி.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:
எலாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களான பாலியஸ்டா் நூல், இயற்கை ரப்பா், லைக்ரா ஆகியவற்றின் விலை கடந்த 2 மாதங்களில் 15 முதல் 35 சதவீதம் வரையில் உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் எலாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கரோனா பொது முடக்கம், தொழிலாளா் பற்றாக்குறை, வராக்கடன் போன்ற காரணங்களால் எலாஸ்டிக் துறை தடுமாறி வருகிறது. மேலும், நிட்டிங், டையிங், பிரிண்டிங் போன்ற ஜாப் ஒா்க்கைப்போல, அல்லாமல் எலாஸ்டிக் உற்பத்திக்குத் தேவையான ரப்பா், பாஸியஸ்டா் நூலை நாங்களே கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.
ஆகவே, மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக வரும் டிசம்பா் 1ஆம் தேதி முதல் எலாஸ்டிக் விலையை 20 சதவீதம் உயா்த்த முடிவு செய்துள்ளோம். இந்த விலை உயா்வு குறித்து பின்னலாடை உற்பத்தியாளா்கள் சங்கங்கள் தங்களது உறுப்பினா்களுடன் பேசி விலை உயா்வுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் திருப்பூா் எலாஸ்டிக் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தின் செயலாளா் ஏ.செளந்தரராஜன், பொருளாளா் பி.டி.சந்திரமோகன், துணைத் தலைவா் செல்வராஜ், துணைச் செயலாளா் முத்துமுருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...