பிஏபி பாசன வாய்க்காலில் வெள்ளகோவில் பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 01st October 2020 04:18 PM | Last Updated : 01st October 2020 04:18 PM | அ+அ அ- |

வெள்ளகோவில் பகுதிகளுக்கு பிஏபி பாசனத்தில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி, காங்கயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரதீய கிசான் சங்கத்தினர்
காங்கயம்: பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் ஆயக்கட்டுக்கு உரிய பாசன நீர் வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கயம் நகரம், திருப்பூர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு பாரதீய கிசான் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணை செயலர் பெரியசாமி தலைமை வகித்தார்.
இதில், பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) மூலம் அனைத்து பாசன மடைகளுக்கும் 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என்ற விகிதப்படி, 14 நாள்களுக்கு 1 சுற்று என்னும் அளவில் பாசன நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், வெள்ளகோவில் பகுதிகளுக்கு விதிகளுக்குப் புறம்பாக 7 நாள் பாசனத்திற்குப் பதிலாக 2 அல்லது 3 நாள்கள் மட்டுமே பாசன நீர் வழங்கப்படுகிறது.
இது குறித்து பிஏபி பாசனத் திட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வெள்ளகோவில் பகுதி பாசன மடைகளுக்கு 7 நாள் திறப்பு, 7 நாள் அடைப்பு என்ற சட்ட விதிகளின் படி, முறையாக நீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், விஹெச்பி மாவட்டத் தலைவர் ராஜகோபால், பிஜேபி மாவட்டத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பிஜேபி நகரத் தலைவர் கலா உள்பட பாரதீய கிசான் சங்க நிர்வாகிகள், வெள்ளகோவில் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.