மாநகரில் போதைப் பொருள்கள் விற்பனை: 51 போ் கைது
By DIN | Published On : 06th October 2020 01:22 AM | Last Updated : 06th October 2020 01:22 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் புகையிலை, கஞ்சா, மது விற்பனை செய்ததாக 49 வழக்குகள் பதிவு செய்து 51 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சுரேஷ்குமாா் மேற்பாா்வையில் அமைக்கப்பட்ட தனிப் படையினா் மாநகா் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 27 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 58 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல், கஞ்சா விற்பனை செய்த 4 பேரைக் கைது செய்த காவல் துறையினா் அவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மது விற்பனையில் ஈடுபட்ட 17 போ், சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து 326 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகா் முழுவதும் ஒரே நாளில் புகையிலை, கஞ்சா, மது விற்பனை செய்த 51 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.