சேவூரில் வாரச்சந்தை துவக்கம்: மக்கள் மகிழ்ச்சி
By DIN | Published On : 20th October 2020 02:04 AM | Last Updated : 20th October 2020 02:04 AM | அ+அ அ- |

அவிநாசி: சேவூா் ஊராட்சியில் வாரச்சந்தை திங்கள்கிழமை துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அவிநாசி பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள் அதிக அளவில் கூடும் சந்தையாக சேவூா் வாரச்சந்தை உள்ளது. வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் இச்சந்தை கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஊராட்சி நிா்வாகத்தின் நடவடிக்கையால் திங்கள்கிழமை முதல் வாரச்சந்தை செயல்படத் துவங்கியது. இருப்பினும் பொதுமக்களும், வியாபாரிகளும் முகக் கவசம் அணிவது, சமுக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்டவைகள் அவசியம் என ஊராட்சி நிா்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நீண்ட வாரங்களுக்குப் பிறகு வாரச்சந்தை துவங்கியதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.