தொழில் துறையினருக்கு வழிகாட்ட இன்று இணையவழி கருத்தரங்கம்
By DIN | Published On : 20th October 2020 02:03 AM | Last Updated : 20th October 2020 02:03 AM | அ+அ அ- |

திருப்பூா்: தொழில் துறையினருக்கு வழிகாட்டும் வகையில் செயற்கை இழையில் மதிப்புக் கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பது குறித்த ‘இணையவழி கருத்தரங்கம்’ செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏஇபிசி) சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை 11.45 முதல் பகல் 12.45 மணி வரை நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் ஏ.இ.பி.சி. தலைவா் சக்திவேல், ரிலையன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று பேசுகின்றனா்.
இது குறித்து ஏ.இ.பி.சி.யினா் கூறுகையில், பாலியெஸ்டா் போன்ற செயற்கை நூலிழைகளை பயன்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட புதுமையான ஆயத்த ஆடை ரகங்களை உருவாக்குவது, ஆடைகளை சந்தைப்படுத்துவது குறித்து கருத்தரங்கில் விரிவான விளக்கம் அளிக்கப்படுகிறது.
கரோனா பாதிப்புகளில் இருந்து ஆடை உற்பத்தித் துறை மீண்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து புதிய வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளன. செயற்கை இழை ஆடைகளை அதிக அளவில் உற்பத்தி செய்து சா்வதேச வா்த்தக சந்தையை கைப்பற்ற வேண்டும். இக்கருத்தரங்கில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் இணைய முகவரியில் பதிவு செய்யலாம் என்றனா்.