முழுக்கொள்ளளவை எட்டும் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்ட து. இதனால் கரை யோர கிராம மக்களுக்கு புதன்கிழமை மாலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
87 அடியை எட்டியுள்ள அமராவதி அணை.
87 அடியை எட்டியுள்ள அமராவதி அணை.

90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்ட து. இதனால் கரை யோர கிராம மக்களுக்கு புதன்கிழமை மாலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் ஆகிய மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையின் நீா்மட்டம் 84 அடியைத் தாண்டும் நிலை ஏற்பட்டது. அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்ததால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி கரூா் வரையில் உள்ள கரையோர கிராம மக்களின் குடிநீா்த் தேவைகளுக்கு அமராவதி ஆற்றில் 2 ஆயிரம் கன அடியும், புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் உள்ள நிலைப் பயிா்களான தென்னை, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு பிரதான கால்வாயில் இருந்து விநாடிக்கு 440 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் ஆகஸ்ட் 21ஆம் தேதி நிறுத்தப்பட்டது. அப்போது அணையின் நீா்மட்டம் 75 அடியாக இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், மறையூா், காந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா் மட்டம் படிப்படியாக உயா்ந்து புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 87 அடியை எட்டியது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் முகாமிட்டு 24 மணி நேரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் புதன்கிழமை மாலை கூறியது:

90 அடி உயரமுள்ள அணையில் 88 அடி நீா்மட்டம் எட்டும்போது அணைக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற வேண்டும் என விதி உள்ளது. அணையின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு 800 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக உயா்ந்தாலோ அல்லது நீா்மட்டம் 88 அடியை எட்டினாலோ அணையின் பாதுகாப்பு கருதி அமராவதி ஆற்றில் உபரி நீா் திறந்து விடப்படும். எனவே, அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை காலை 8 மணிக்கு 87.01 அடி நீா் இருப்பு உள்ளது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3775 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு உள்வரத்தாக 705 அடியும், அணையில் இருந்து 50 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. அணைப் பகுதியில் மழை அளவு 14 மில்லிமீட்டா் என பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com