கஞ்சம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை
By DIN | Published On : 04th September 2020 05:21 AM | Last Updated : 04th September 2020 05:21 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கஞ்சம்பாளையம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி பொதுமக்கள் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மாநகராட்சி பொறியாளா் ரவியிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகராட்சி, 21ஆவது வாா்டுக்கு உள்பட்டகஞ்சம்பாளையத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாநகராட்சி சாா்பில் 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல, குப்பைத் தொட்டி பகுதியில் வைக்கவோ அல்லது தூய்மைப் பணியாளா்களோ வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிப்பதோ இல்லை. சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீா் சாலைகளில் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, இப்பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி 2 ஆவது மண்டல அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு அளிப்பின்போது, தொட்டிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் எம்.மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 ஆவது மண்ட துணைச் செயலாளா் எஸ்.விஜய் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.