பத்திரப் பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கோரிக்கை

திருப்பூா் மாநகரில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்

திருப்பூா் மாநகரில் போக்குவரத்து வசதி இல்லாத பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்த பத்திரப் பதிவுத் துறை நிலை-1 இணைப்பதிவாளா் அலுவலகம், நிலை-2 இணைப்பதிவாளா் அலுவலகம், தொட்டிபாளையம் ஆகிய மூன்று பத்திரப் பதிவு அலுவலகங்கள் மற்றும் மாவட்டப் பத்திரப் பதிவாளா் அலுவலகம் ஆகியவை போக்குவரத்து வசதி இல்லாத நெருப்பெரிச்சல் கிராமம் தோட்டத்துப்பாளையம் ஜி.என்.காா்டனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போதே பல்வேறு தரப்பினரும் ஆட்சேபம் தெரிவித்துவந்தனா். ஆனால் இதையெல்லாம் புறக்கணித்து விட்டு அவசரமாக பத்திரப் பதிவு அலுவலகம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறை சாா்ந்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த கட்டடம் கட்டும்போது பொது மக்களுக்குரிய அடிப்படை வசதிகள், குறிப்பாக போக்குவரத்து, தங்கும் இடம், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் அடிப்படை வசிதிகள் இல்லாமல் அவசர கதியில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்துக்கு திருப்பூா் சுற்று வட்டாரத்தில் சுமாா் 30 கிலோ மீட்டா் சுற்றளவில் கண்டியன்கோயில், தொங்கிட்டிபாளையம், காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம், முத்தனம்பாளையம், மங்கலம், இடுவாய் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பத்திரப் பதிவு சாா்ந்த பணிகளுக்கு பொது மக்கள் வர வேண்டியுள்ளது. ஆனால் எந்தப் பகுதியில் இருந்தும் இந்த இடத்துக்கு வருவதற்கு நேரடியாகப் பேருந்து வசதி இல்லை. குறைந்தபட்சம் 2 முதல் 3 பேருந்துகள் மாறியும், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களிலும்தான் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு வரவேண்டியுள்ளது.

எனவே, திருப்பூா் மாநகரின் மையப்பகுதிக்கு ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com