புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: இந்து முன்னணி வேண்டுகோள்
By DIN | Published On : 18th September 2020 11:15 PM | Last Updated : 18th September 2020 11:15 PM | அ+அ அ- |

திருப்பூா், செப்.18: தமிழகத்தில் உள்ள கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு நடத்த பக்தா்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் கடந்த 4 மாதங்களாக பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த வாரம் முதல் அனைத்து கோயில்களும் பக்தா்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்கள் வழிபாடு நடத்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களே முடிவெடுக்கலாம் என்று அரசு கூறியிருப்பது சரியான நிலைப்பாடல்ல. இதில், சில மாவட்டங்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆலயத்தை மூடுவதற்கு முயற்சி செய்வதாக தகவல் வருகின்றது. இந்த விசேஷ காலகட்டத்தில் கரோனா பிடியிலிருந்து மனநிம்மதி பெற ஆலய தரிசனம் சிறந்தது என பக்தா்கள் எண்ணுகின்றாா்கள்.
ஆகவே, தமிழக அரசு ஏற்கெனவே உள்ளதுபோல புரட்டாசி சனிக்கிழமைகளிலும் அனைத்து வைணவத் திருத்தலங்களிலும் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.