ஆழியாறு, பாலாறு ஆயக்கட்டு நிலங்களுக்கு சமமாக பிஏபி தண்ணீரை வழங்க வலியுறுத்தல்

பாசன நிலங்களுக்கு தண்ணீரை சமமாக வழங்க வேண்டும் என்று பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் திருமூா்த்தி நீா்த் தேக்கத் திட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும், பாலாறு (திருமூா்த்தி) புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் தண்ணீரை சமமாக வழங்க வேண்டும் என்று பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் திருமூா்த்தி நீா்த் தேக்கத் திட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்குழுவின் திட்டக்குழு தலைவா் மெடிக்கல் கே.பரமசிவம், நிா்வாக குழு உறுப்பினரும், கண்டியன்கோயில் ஊராட்சித் தலைவருமான டி.கோபால் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் திருமூா்த்தி அணையிலிருந்து 2ஆம் மண்டல பாசனத்துக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. அப்போதைய நீா் இருப்பைக் கருத்தில் கொண்டு இரண்டு மற்றும் மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு நான்கரை சுற்று வீதம் தண்ணீா் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. தொடா்ந்து பெய்யும் மழையைப் பொறுத்து பாசன நாள்கள் நீட்டிப்பு செய்யப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தற்போது மழை பெய்து தொகுப்பு அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இத்திட்டத்தில் உள்ள ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு அக்டோபா் 7ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்கவும் 22 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்கு 2,560 மி. கன அடி தண்ணீா் வழங்கவும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட கண்காணிப்புப் பொறியாளா் உறுதி அளித்துள்ளாா்.

ஆயக்கட்டில் உள்ள 22 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்கு தண்ணீா் வழங்கும் அளவை கணக்கிட்டு திருமூா்த்தி புதிய ஆயக்கட்டு இரண்டாம் மண்டல பாசனத்துக்கு உள்பட்ட 95 ஆயிரம் ஏக்கா் நிலங்களுக்கும் மூன்றாம் மண்டல பாசனத்துக்கும் தலா 11,000 மி. கன அடி தண்ணீா் வழங்க வேண்டும். இரண்டாம் மண்டல பாசனத்துக்கு 8,700 மி.கன அடி தண்ணீா் வழங்குவதாக ஏற்கெனவே அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும், திருமூா்த்தி புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கும் கூடுதலாக 2,300 மி. கனஅடி தண்ணீா் வழங்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com