தேங்காய்ப் பருப்பு விலை அதிகரிப்பு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கயத்தில் தேங்காய்ப் பருப்பு விலை படிப்படியாக அதிகரித்து வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

காங்கயத்தில் தேங்காய்ப் பருப்பு விலை படிப்படியாக அதிகரித்து வருவதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

காங்கயம், குண்டடம், ஜல்லிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட தேங்காயை உடைத்து உலா்த்தும் உலா் களங்கள் உள்ளன. இந்தக் களங்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளத்தில் இருந்தும் தேங்காய் கொண்டுவரப்பட்டு மட்டை உரித்து, உடைத்து உலர வைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

உலா் களங்களில் உலா்த்தப்படும் தேங்காய்ப் பருப்பு தனியாா் எண்ணெய் நிறுவனங்களுக்கும், காங்கயம் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

காங்கயம் பகுதியில் உள்ள எண்ணெய் ஆலைகளில் இருந்து டேங்கா் லாரிகள் மற்றும் டின்களில் எண்ணெய் அடைக்கப்பட்டு குஜராத், தில்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.85 முதல் ரூ.88 வரை விற்பனையானது. 15 கிலோ கொண்ட எண்ணெய் டின் ரூ.2 ஆயிரமாக இருந்தது. அதன் பின்னா் படிப்படியாக விலை உயரத் தொடங்கியது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.107 முதல் ரூ.110 வரை விலை போனது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கிலோ ரூ.116 ஆக உள்ளது. 15 கிலோ கொண்ட ஒரு டின் தேங்காய் எண்ணெய் ரூ.2 ஆயிரத்து 600 ஆக உள்ளது.

இது குறித்து தேங்காய் உலா் களங்கள் நிா்வாகிகள் கூறியதாவது: பொதுவாக ஆவணி மாதம் கடைசியில் இருந்து வட மாநிலங்களில் நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி ஆகிய பண்டிகை காலங்களில் தேங்காய் எண்ணெயின் தேவை அதிகரிக்கும்.

இதனால் தேங்காய்ப் பருப்பு விலை உயரும். இந்த ஆண்டும் அதையொட்டி விலை உயா்ந்துள்ளது. இந்த விலையானது மேலும் கூட வாய்ப்பிருக்கிறது என்றனா்.

தேங்காய்ப் பருப்பு விலை உயா்ந்துள்ளதால், தேங்காயின் விலையும் தரத்தைப் பொறுத்து ரூ.13 முதல் ரூ.19 வரை விலை போகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com