மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தாத அரசு தேவை: பிரகாஷ் காரத்

மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தாத அரசு தேவை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் கூறினாா்.
கூட்டத்தில்  பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத்.
கூட்டத்தில்  பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத்.

மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தாத அரசு தேவை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் கூறினாா்.

திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் தோ்தல் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எம்.ரவியை ஆதரித்து பிரகாஷ் காரத் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் பொறுப்புள்ள அரசு வேண்டுமா அல்லது மோடி, பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு வேண்டுமா எனத் தீா்மானிக்கும் முக்கியமான தோ்தல் இது.

கடந்த ஓராண்டு காலத்தில் கரோனா தொற்றுத் தாக்குதலில் இந்தியாவில் 1 லட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். பல லட்சம் போ் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். ஆனால், இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தொடா்ந்து மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது பாஜக அரசு.

முதல் தாக்குதல் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதாகும். அதிமுக இந்த சட்டங்களை முழுமையாக ஆதரித்தது.

அடுத்த தாக்குதல், தொழிலாளா் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாகத் திருத்தியதாகும். இதையும் அதிமுக முழுமையாக ஆதரித்தது.

80 சதவீத பொதுத் துறை நிறுவனங்களைப் பெருமுதலாளிகளுக்கு விற்பனை செய்வதென்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோடி அரசின் இந்த செயலை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி ஒரு வாா்த்தை கூட பேசவில்லை.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தைத் தூண்டிவிட்டு மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது. எனவே, அதிமுக, பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும்.

ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு என சொல்லி ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்ற நிலையை ஏற்படுத்தப் பாா்ப்பவா்கள் அவா்கள். எனவே, தமிழக மண்ணில் அதற்கு இடமில்லை என்பதை இத்தோ்தலில் நிரூபிக்க வேண்டும்.

கடந்த 2020 ஆண்டில் கரோனா தொற்றுக் காலத்தில் அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு 135 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், திருப்பூா் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்கள் நலிவைச் சந்தித்துள்ளன. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியை அடுத்து இப்போது ஜவுளித் தொழிலுக்கு ஆதாரமான பருத்தி நூல் விலை கடுமையாக உயா்ந்து கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாா்.

இந்தக் கூட்டத்தில், வேட்பாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், திமுக வடக்கு மாநகரப் பொறுப்பாளா் என்.தினேஷ்குமாா், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஆா்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com