முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
வீட்டில் பதுக்கிய 2,051 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது
By DIN | Published On : 04th April 2021 03:42 AM | Last Updated : 04th April 2021 03:42 AM | அ+அ அ- |

சேவூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,051 மது பாட்டில்களை தோ்தல் கூடுதல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, இருவா் கைது செய்யப்பட்டனா்.
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதியும் மதுக் கடைகள், மது பானக்கூடங்களை மூட திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, மது பானங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்கவும், வாக்காளா்களுக்கு மது பாட்டில்கள் விநியோகிப்பதைத் தடுக்கவும் தோ்தல் பறக்கும் படை, போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே பந்தம்பாளையத்தில் தோ்தல் நாளன்று விநியோகம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தோ்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைந்துள்ளது.
இதையடுத்து, தோ்தல் கூடுதல் பறக்கும் படை 2ஆவது அணி ‘பி’ குழும அலுவலரும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருமான டி.சாந்திலட்சுமி தலைமையிலான குழுவினா் பந்தம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சோதனை மேற்கொண்டனா்.
பந்தம்பாளையம் அதிமுக கிளைச் செயலாளரான முருகேசன் வீட்டில் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டதில், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,051 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, வீட்டில் இருந்த கருப்பசாமி மகன் முருகேசன் (57), ஆறுச்சாமி மகன் ஐயப்பன் (35) ஆகியோரையும், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களையும் சேவூா் காவல் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முருகேசன், ஐயப்பன் ஆகியோரைக் கைது செய்தனா்.