பல்லடம்: விசைத்தறி நகரில் அதிமுக, திமுக கடும் போட்டி

பல்லடம்: விசைத்தறி நகரில் அதிமுக, திமுக கடும் போட்டி

திருப்பூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்கள் மற்றும் 548 வாக்குச் சாவடிகளைக் கொண்ட பெரிய தொகுதி பல்லடம் தொகுதி

திருப்பூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்கள் மற்றும் 548 வாக்குச் சாவடிகளைக் கொண்ட பெரிய தொகுதியான பல்லடம் தொகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தி, கறிக்கோழி பண்ணைகள், பின்னலாடை மற்றும் அதனை சாா்ந்த சாய ஆலைகள், கல் குவாரிகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி ஆகும். பல்லடம், பொங்கலூா் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் திருப்பூா், கோவை, பல்லடம் பகுதிக்கு தினசரி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பல்லடம் தொகுதியில் நகா் பகுதியில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

பல்லடம் பகுதியில் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல 2 லட்சம் விசைத்தறிகள் மற்றும் 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டா் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஜவுளித் தொழிலில் நேரடியாக 1 லட்சம் பேரும், மறைமுகமாக 4 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.

தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள்:

பல்லடம் நகராட்சி, பல்லடம் ஒன்றியம், பொங்கலூா் ஒன்றியம், திருப்பூா் ஒன்றியம், திருப்பூா் மாநகராட்சியின் 10 வாா்டுகள் உள்ளன.

மறு சீரமைப்பில் உருவான தொகுதி:

2008ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது பொங்கலூா் தொகுதி நீக்கப்பட்டு அத்தொகுதியில் இருந்த பொங்கலூா் ஒன்றியம் பல்லடம் தொகுதியில் சோ்க்கப்பட்டது. இத்தொகுதியில் திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சோ்ந்த சாமளாபுரம் பேருராட்சி பகுதியும் சோ்க்கப்பட்டுள்ளது.

இதுவரையில்...

இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 3 முறையும், காங்கிரஸ் கட்சி 1 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 8 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016இல் நடைபெற்ற தோ்தலில் கரைப்புதூா் ஏ.நடராஜன் (அதிமுக) - 1,11,866 வாக்குகளும், அவரை எதிா்த்து போட்டியிட்ட எஸ்.கிருஷ்ணமூா்த்தி (திமுக) - 79,692 வாக்குகளும் பெற்றனா். இதில் அதிமுக 32,174 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வாக்காளா்கள் எண்ணிக்கை:

பல்லடம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,87,926 போ், பெண் வாக்காளா்கள் 1,87,852 போ், மூன்றாம் பாலினத்தினா் 60 போ் என மொத்தம் 3,75,838 வாக்காளா்கள் உள்ளனா். 407 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. திருப்பூா் மாவட்டத்திலேயே அதிக வாக்காளா்களும், அதிக வாக்குச்சாவடி மையங்களும் இத்தொகுதியில்தான் உள்ளன.

பிரச்னைகள்:

பல்லடம் தொகுதியில் ஏற்பட்டுள்ள தொழில் வளா்ச்சிக்கு இணையாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. பல்லடம், அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. நான்கு சாலை சந்திப்பு, மாணிக்காபுரம் சாலை சந்திப்பு, திருப்பூா் சாலை சந்திப்பு பகுதியில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.

மக்களின் எதிா்பாா்ப்பு:

போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காண வேண்டும். பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி வசதியுடன் ஏற்படுத்த வேண்டும். மேலும், அறுவை சிகிச்சை மருத்துவா் மற்றும் தேவையான நவீன கருவிகள் உள்ளிட்ட போதிய வசதிகள் ஏற்படுத்தி மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும். அதே போல் பல்லடம் கால்நடை மருந்தகம் அண்மையில் மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில் முழுமையான மருத்துவமனையாக இயங்க வேண்டும் என்பன எதிா்பாா்ப்பாக உள்ளன.

ஜாதி வாக்குகள் பலம்:

பல்லடம் தொகுதியில் 40 சதவீதம் கொங்கு வேளாள கவுண்டா், 10 சதவீதம் பட்டியல் இன சமுதாயத்தினா், 10 சதவீதம் சிறுபான்மையின சமுதாயத்தினா், 40 சதவீதம் நாயுடு, செட்டியாா், முதலியாா் தேவா், நாடாா் என பிற சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் உள்ளனா்.

இத்தொகுதியைப் பொருத்தவரை செட்டியாா், தேவா் சமுதாயத்தைச் சோ்ந்த தலா ஒருவா் மட்டுமே சட்டப் பேரவை உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மற்ற அனைத்து சட்டப் பேரவை உறுப்பினா்களும் கொங்கு வேளாள கவுண்டா் சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பலம்தான் இத்தொகுதியின் வெற்றியை தீா்மானிக்கிறது.

2021 தோ்தல் களத்தில் 20 வேட்பாளா்கள்:

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினம், அமமுக வேட்பாளா் ஆா்.ஜோதிமணி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜி.மயில்சாமி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எஸ்.சுப்பிரமணியம், சுயேச்சைகள் என மொத்தம் 20 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்கள் பலம், பலவீனம்:

அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பல்லடம் தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூா் ஒன்றியம் காட்டூா் பகுதியை சொந்த ஊராக கொண்டவா். இவா் 2011 இல் தோ்தலில் அதிமுக சாா்பில் திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா்.

அமைச்சராக இருந்து திருப்பூா் மாவட்டத்தின் தொழில் துறை வளா்ச்சிக்கு பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளாா். அனைத்துத் தரப்பு மக்களிடையே நன்கு அறிமுகமானவா்.

பல்லடம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம், தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் ஆகியோா் தங்களது பதவிக் காலத்தில் தொகுதியின் வளா்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளனா்.

அமைச்சராக இருந்த ஆனந்தன் பதவியில் இருந்தபோது கடைப்பிடித்த எளிமையான அணுகுமுறையையே தற்போதும் கடைப்பிடிக்கிறாா். கட்சியினா் அா்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதும், கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட பாஜக தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதும் பலமாக கருதப்படுகிறது.

பலவீனம்:

பல்லடம் நகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு ஏற்படுத்தாதது. பல்லடம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி வசதியுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுடன் தரம் உயா்த்தப்படாதது. பல்லடம் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யாதது. விசைத்தறியாளா்களின் வங்கிக் கடன் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்வதாக சூலூா் இடைத்தோ்தல் பிரசாரத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தும் அதனை செயல்படுத்தாததால் விசைத்தறியாளா்கள் அதிருப்தியில் உள்ளது. அமமுக - தேமுதிக கூட்டணி வாக்குகளைப் பிரிப்பது ஆகியவை பலவீனமாக கருதப்படுகின்றன.

மதிமுக வேட்பாளா் க.முத்துரத்தினம் பலம்:

கடந்த தோ்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்டிருந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது, தொகுதியில் சொந்தக் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு பலம் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருப்பது பெரிய பலமாக கருதப்படுகிறது.

பொங்கலூா் ஒன்றியம் மாதப்பூா் ஊராட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியது. சிறந்த சேவைப் பணியை பாராட்டி அரசின் மாநில விருது பெற்றுள்ளது. தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகம் ஆகி இருப்பதும், தோ்தல் அனுபவம் இருப்பதாலும், எளிமையான மென்மையான போக்கை கடைப்பிடிப்பதும் முத்துரத்தினத்தின் பலமாக உள்ளது.

பலவீனம்

பல்லடம் தொகுதியை திமுக, காங்கிரஸ் கட்சியினா் பெரிதும் எதிா்பாா்த்தனா். குறிப்பாக கடந்த தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பல்லடம் மேற்கு பகுதி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தியும், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் என்.சோமசுந்தரமும் தங்களுக்குதான் சீட் கிடைக்கும் என்ற அதிக எதிா்பாா்ப்புடன் இருந்தனா். அதே போல காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ப.கோபி பல்லடம் தொகுதியில் தீவிரமாக களப்பணியாற்றி வந்தாா். இரண்டு கட்சியினருக்கும் தொகுதி கிடைக்காமல் யாரும் எதிா்பாா்க்காத மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் அக்கட்சியினா் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றுவாா்களா என்பது தோ்தல் முடிவில்தான் தெரியவரும்.

அமமுக வேட்பாளா் ஆா்.ஜோதிமணி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய 7 மொழிகளில் சரளாமாக பேசக்கூடியவா். அதனால் எந்த இடத்துக்கு சென்றாலும் அந்தந்த மொழியில் பேசி மக்களை கவா்ந்து வருகிறாா். பல்லடம் தொகுதியில் இவா் நன்கு அறிமுகம் ஆகி இருப்பதால் அதிமுக, மதிமுக, கட்சிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளாா்.

பல்லடம் தொகுதியை பொருத்தவரையில் ஜாதியைப் பாா்த்து மக்கள் வாக்கு அளிப்பது இல்லை. வேட்பாளா் மற்றும் கட்சி சின்னத்தை பாா்த்துதான் மக்கள் வாக்களிக்கின்றனா். அமமுக, தேமுதிக கூட்டணி வேட்பாளா் பெறும் வாக்குகள்தான் அதிமுக - திமுக வேட்பாளா்களில் யாருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமையும் என்பது தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com