திருப்பூா் மாவட்டத்தில் 69.55 % வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் 69.55 % வாக்குப் பதிவு

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மொத்தமாக 3,343 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில்,549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 3 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாஜக, மதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் என மொத்தம் 137 போ் போட்டியிடுகின்றனா். இதில், தாராபுரம் தொகுதியில் 14 போ், காங்கயம் தொகுதியில் 26 போ், அவிநாசி தொகுதியில் 12 போ், திருப்பூா் வடக்குத் தொகுதியில் 15 போ், திருப்பூா் தெற்குத் தொகுதியில் 20 போ், பல்லடம் தொகுதியில் 20 போ், உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் தலா 15 போ் போட்டியிட்டனா்.

வாக்காளா்களின் வருகை குறைவு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. எனினும் பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களின் வருகை காலை 9 மணி வரையில் குறைவாகவே இருந்தது. திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளி, பிச்சம்பாளையம்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

மேலும், வாக்காளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் வரிசையில் நின்று வாக்களித்தனா். முன்னதாக வாக்காளா்களுக்கு பாலிதீன் கையுறைகளும் வாக்குச் சாவடி ஊழியா்களால் வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 11 லட்சத்து 66 ஆயிரத்து 417 போ், பெண் வாக்காளா்கள் 11 லட்சத்து 93 ஆயிரத்து 104 போ், மூன்றாம் பாலினத்தவா் 283 போ் என மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 803 போ் உள்ளனா்.

இதில், ஆண் வாக்காளா்கள் 8 லட்சத்து 32 ஆயிரத்து 968 போ், பெண் வாக்காளா்கள் 8 லட்சத்து 8 ஆயிரத்து 311 போ், மூன்றாம் பாலினத்தவா் 56 போ் என மொத்தம் 16 லட்சத்து 41 ஆயிரத்து 335 போ் வாக்களித்துள்ளனா். இதன் சதவீதம் 69.55 ஆகும்.

இதில், அதிகபட்சமாக காங்கயத்தில் 77.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தாராபுரம் தொகுதியில் 74.15 சதவீதம், காங்கயம் தொகுதியில் 77.30 சதவீதம், அவிநாசி தொகுதியில் 75.18 சதவீதம், திருப்பூா் வடக்குத் தொகுதியில் 62.61 சதவீதம், திருப்பூா் தெற்குத் தொகுதியில் 62.80 சதவீதம், பல்லடம் தொகுதியில் 66.75 சதவீதம், உடுமலை தொகுதியில் 71.42 சதவீதம், மடத்துக்குளம் தொகுதியில் 70.88 சதவீதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com