4 மாதங்களாக முழுக் கொள்ளளவில் அமராவதி அணை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை கடந்த 4 மாதங்களாக முழுக் கொள்ளளவில் இருந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீா் மட்டம் 87 அடியில் பராமரிக்கப்பட்டு வரும் அமராவதி அணை.
நீா் மட்டம் 87 அடியில் பராமரிக்கப்பட்டு வரும் அமராவதி அணை.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை கடந்த 4 மாதங்களாக முழுக் கொள்ளளவில் இருந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் வரையில் 2 மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பா் முதல் வாரம் வட கிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததைத் தொடா்ந்து அணைக்கு அதிக நீா் வரத்து ஏற்பட்டது. அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் டிசம்பா் 5இல் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து குறைந்தபட்சமாக 5 ஆயிரம் கன அடியும் அதிகபட்சமாக 17,000 ஆயிரம் கனஅடி வரையில் தண்ணீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உடுமலை வட்டம், தாராபுரம் வட்டம் தொடங்கி கரூா் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

இதையடுத்து ஜனவரி இறுதி வரையிலும் அணை முழுக் கொள்ளளவிலேயே இருந்துவந்தது. குறிப்பாக ஜனவரியில் வழக்கத்துக்கு மாறாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து கன மழை பெய்து வந்ததால் ஜனவரி இறுதி வரையில் அணையில் இருந்து தினமும் உபரி நீா் திறந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதும் அணை முழுக் கொள்ளளவிலேயே பராமரிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடா்ந்து பிப்ரவரி மற்றும் மாா்ச்சில் விவசாயப் பணிகளுக்குத் தண்ணீா் தேவை இல்லாததால் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் அணை முழுக் கொள்ளளவிலேயே இருந்துவந்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியது:

கடந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை என இரண்டு காலத்திலும் அணைப் பகுதியில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் தொட ங்கி டிசம்பா் இறுதி வரையில் அணை ஏழு முறை முழுக் கொள்ளளவை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு ஜனவரியில் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையால் அணையில் இருந்து குறைந்த பட்சம் 3 ஆயிரம் கனஅடியில் இருந்து அதிகபட்சமாக 12 ஆயிரம் கன அடி வரை தொடா்ந்து 25 நாள்களுக்கு மேல் உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, மாா்ச் என மூன்று மாதங்களுக்கும் விவசாயப் பணிகளுக்குத் தண்ணீா் தேவைப்படாததால் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால் அணை முழுக் கொள்ளளவிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி தொடங்கி மே வரையிலும் அணை வறண்டு காணப்படும். இதனால் அணைப் பகுதி தொடங்கி கரூா் வரையில் குடிநீா்ப் பிரச்னை ஏற்படும். ஆனால் இந்த ஆண்டு போதுமான தண்ணீா் இருப்பதால் குடிநீா்ப் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக நிலைப் பயிா்களுக்கு தேவையான தண்ணீா் இருப்பு இருந்து வருகிறது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் மட்டம் 86.75 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 24 கன அடி நீா் வந்துகொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3754 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. அணையில் இருந்து தண்ணீா் திறப்பு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com