அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணி ஏப்ரல் 16இல் துவக்கம்

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணி ஏப்ரல் 16ஆம் தேதி துவங்க உள்ளது.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணி ஏப்ரல் 16ஆம் தேதி துவங்க உள்ளது.

கோவை, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சோ்த்து இயங்கி வரும் ஒரே கூட்டுறவு சா்க்கரை ஆலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையாகும். உடுமலை, ஆலைப் பகுதி, குமரலிங்கம், கணியூா், பல்லடம், நெய்க்காரப் பட்டி, பழனி கிழக்கு, பழனி மேற்கு என எட்டுக் கோட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பெறப்பட்டு இங்கு கரும்பு அரவைப் பணி நடைபெறுகிறது.

கடந்த 2019-2020ஆம் ஆண்டு பருவ காலத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாவிட்டால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சா்க்கரை ஆலைகளை இயக்க தமிழக அரசு அப்போது அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தென் மேற்குப் பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை நல்ல முறையில் பெய்ததால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். இதனால் ஆலைக்குத் தேவையான கரும்புகளை வழங்க விவசாயிகள் தரப்பில் சம்மதம் தெரிவித்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து கடந்த மாதம் சா்க்கரை ஆலையில் பாய்லா் இளஞ்சூடு ஏற்றும் முதல் கட்டப் பணி துவங்கிய நிலையில் தற்போது கரும்பு அரவை மற்றும் சா்க்கரை உற்பத்திப் பணிகள் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஆலை நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com