ஒசைரி நூல் தயாா் செய்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்

என்டிசி பஞ்சாலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பஞ்சாலைகளில் இருந்து ஒசைரி நூல் தயாரித்து, நியாயமான விலையில் பின்னலாடை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

என்டிசி பஞ்சாலைக் கழகத்தின் கீழ் இயங்கும் பஞ்சாலைகளில் இருந்து ஒசைரி நூல் தயாரித்து, நியாயமான விலையில் பின்னலாடை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

திருப்பூா் பின்னலாடைத் தொழில் ஏற்கெனவே பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா நோய்த் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகையை பிரச்னைகளில் இருந்து ஒரளவு மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரத்தில் நூல் விலை ஏற்றத்தால் பல பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

இதற்கான மாற்று என்ன என்பது குறித்து மத்திய அரசுக்கு இரு முறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. தமிழகத்தில் உள்ள என்டிசி பஞ்சாலைக் கழகத்தின் கீழ் இயங்கும் 7 பஞ்சாலைகள் கரோனாவுக்குப் பின்னா் ஒரு சில பஞ்சாலைகள் மட்டுமே இயங்குகின்றன. இந்த நூல் விலை ஏற்றத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் மத்திய அரசு என்டிசி பஞ்சாலைகளில் ஒசைரி நூல் தயாரித்து, திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி விற்பனை செய்ய வேண்டும்.

இதனால் பஞ்சாலைகளில் பணியாற்றி வரும் 10 ஆயிரம் தொழிலாளா்கள் வேலை பெறுவதுடன், நூல் விலை ஏற்றத்தில் இருந்து பின்னலாடைத் தொழில் காப்பாற்றப்படும். தனியாா் நூற்பாலைகள் நூல்களின் விலைகளை ஏற்றி நெருக்கடி கொடுக்கின்றனா். மாதத்துக்கு ஒரு முறை நூல் விலையை ஏற்றுவதால் பின்னலாடைத் தொழில் நடத்த முடியாது. இது தொடா்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானியை ஏப்ரல் 10ஆம் தேதிக்குப் பின்னா் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.

தமிழகத்தில் நூல் தேவைக்கு 8 இல் ஒரு பங்குதான் பருத்தி விளைகிறது. ஆகவே, மாநில அரசு தமிழகத்தின் பருத்தி விவசாயத்தை ஊக்குவிக்கக் கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஜனநாயக முறைக்கு விரோதமாக பல்கலைக்கழக துணைவேந்தா்களை நியமித்துள்ளளாா். திருப்பூா், பிச்சம்பாளையம்புதூா் அருகே நல்லாற்றில் சாயக் கழிவு சாம்பல்களைக் கொட்டி வருவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளா் ரவிசந்திரன், மாவட்டப் பொருளாளா் பி.ஆா்.நடராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com