பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்க வேண்டும்
By DIN | Published On : 27th April 2021 12:57 AM | Last Updated : 27th April 2021 12:57 AM | அ+அ அ- |

திருப்பூா்: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கும் மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரைச் சோ்ந்த பகுதி நேர சிறப்பாசிரியா் ஆா்.ராமகிருஷ்ணன் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியா்களாக சுமாா் 16,549 போ் கடந்த 2012இல் நியமிக்கப்பட்டனா். எங்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 11 மாதம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது வரையில் மே மாதத்துக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்தநிலையில், கடந்த 2020ஆம் ஆண்டில் கரோனா நோய்த் தொற்று காரணமாக வாழ்க்கையை நடத்தவே மிகவும் சிரமப்பட்டோம். இந்த நிலையில், பகுதிநேர சிறப்பாசிரியா்களுக்கு 2021ஆம் ஆண்டு மே மாதமும் ஊதியம் வழங்கப்படாது என்று அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட அலுவலா் தெரிவித்துள்ளாா்.
கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் வேளையில் பணியில்லாமல், ஊதியமும் இல்லாமல் வீட்டு வாடகை, அத்தியாவசிய செலவுகளுக்கு சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்தோ அல்லது சிறப்பு ஒதுக்கீட்டில் அனைத்து பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கும் மே மாதம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.