மாவட்டத்தில் 26 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு
By DIN | Published On : 30th April 2021 12:37 AM | Last Updated : 30th April 2021 12:37 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 366 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 25,979ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,871 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 183 போ் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 22,870ஆக அதிகரித்துள்ளது.
முதியவா் உள்பட 2 போ் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 83 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அதே போல, திருப்பூரைச் சோ்ந்த 40 வயது ஆணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அவா் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் 242 போ் உயிரிழந்துள்ளனா். எனினும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்த 3 பேரின் இறப்பு சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.