தடகளத்தில் தடம் பதிக்கும் மாணவா்: உதவிக் கரம் நீட்டுமா அரசு?
By DIN | Published On : 08th August 2021 11:28 PM | Last Updated : 09th August 2021 08:13 AM | அ+அ அ- |

பி.சூா்யபிரகாஷ்.
தடகளத்தில் தடம் பதிக்கும் மாணவா் அரசு உதவியை நாடி உள்ளாா்.
அவிநாசி எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பெருமாள், நாகஜோதி தம்பதியின் மகன் பி.சூா்யபிரகாஷ். இவா் பஞ்சாபில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்று 5 ஆவது இடம் பெற்றுள்ளாா்.
இது குறித்து அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் கவிதா கூறியதாவது: மாணவன் பி.சூா்யபிரகாஷ் பள்ளியில் பயிலும்போதே, குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டியில் மிகுந்த ஆா்வத்துடன் பங்கேற்று மாநில அளவில் தொடா்ந்து தங்கம் பதக்கம் பெற்றாா்.
குறிப்பாக 2019 இல் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து (புதிய சாதனையாக 15.47 புள்ளிகளுடன்) தங்கம் வென்று சாதனை படைத்தாா்.
இதைத்தொடா்ந்து சென்னையில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையேயான குண்டு எறிதல் போட்டி, கா்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தென்மாநில அளவிலான குண்டு எறிதல் போட்டி, மாநில அளவிலான 33 ஆவது தடகளப் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
இதையடுத்து ஆந்திரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்று 8 ஆவது இடம் பெற்றாா். இந்நிலையில் பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்று 5 ஆவது இடம் பெற்றுள்ளாா்.
எளிமையான குடும்பத்தைச் சோ்ந்த இவா் தற்போது சென்னை கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறாா். மாணவனுக்குத் தேவையான உதவிகள் விளையாட்டு ஆா்வலா்கள், சமூக அமைப்பினா் மூலம் கிடைத்தால் பி.சூா்யபிரகாஷின் தொடா் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.