முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
மீன் வளா்ப்பு: விவசாயிகளுக்கு மானியம்
By DIN | Published On : 03rd December 2021 12:54 AM | Last Updated : 03rd December 2021 12:54 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைத்து மீன்களை வளா்க்க விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதரத்தை உயா்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருந்தித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் ஆயிரம் சதுர மீட்டரில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை புனரமைத்து மீன்களை வளா்க்க உள்ளீட்டு செலவீனத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. பண்ணைக் குட்டைகளுக்கு பாலித்தீன் உறையிடுதல் மற்றும் மீன் வளா்க்க ஆகும் உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் மானியமும், விரால் மீன் வளா்க்க உள்ளீட்டு செலவினத்தில் 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரமும் மானியமாக வழங்கப்படும்.
மேலும், பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளங்கள் மற்றும் கல் குவாரியில் உள்ள நீா் நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன் வளா்ப்பு செய்திடும் திட்டத்தின்கீழ் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சமும், ஆதிதிராவிட மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சமும் மானியமாக வழங்கப்படும்.
ஆகவே, மீன் வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தாராபுரத்தை அடுத்த கோனேரிப்பட்டியில் உள்ள நல்லதங்காள் ஓடை அணையில் இயங்கி வரும் மீன் வள அலுவலகத்தை 93848-24520, 96291-91709 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோட்டில் உள்ள மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 0424-2221912 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.