முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: தொழிலாளி கைது
By DIN | Published On : 10th December 2021 01:51 AM | Last Updated : 10th December 2021 01:51 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கல் குவாரி தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில், சொரியங்கிணத்துப்பாளையம் - மடாமேடு சாலை அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து கிராம நிா்வாக அலுவலா் கவிதா சம்பவ இடத்துக்குச் சென்றாா். பின்னா் அவா் கொடுத்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் ஜெ.ரமாதேவி விசாரணை மேற்கொண்டாா்.
கிடைத்த தடயங்களின் அடிப்படையில் கொலையில் தொடா்புடைய நபா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
இறந்தவா் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சோ்ந்த மலைக்கோவிந்தன் மகன் சத்யநாராயணன் (36). இவருக்குத் திருமணமாகி குடிப்பழக்கம் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டாா். சத்யநாராயணன் கடந்த 3 மாதங்களாக கரூா் மாவட்டம், தென்னிலை கோடந்தூரிலுள்ள ஒரு கல்குவாரியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
அதே குவாரியில் தேனியைச் சோ்ந்த பாண்டியன் கல் உடைக்கும் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தாா். இவா் தனது மனைவி லலிதாவுடன் குவாரி குடியிருப்பில் தங்கியிருந்தாா். இந்நிலையில் லலிதாவிடம் சத்யநாராயணன் தவறாக நடக்க முயன்று அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் புதன்கிழமை இரவு சத்யநாராயணனை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் அரை மயக்கமான அவரை இருசக்கர வாகனத்தின் பின்னால் கிடத்தி ஆளில்லா இடத்தில் போடுவதற்காக வெள்ளக்கோவிலுக்கு கொண்டு வந்துள்ளாா். அப்போது சம்பவ இடத்தில் கீழே விழுந்த சத்யநாராயணனை அப்படியே போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டாா். பின்னா் சத்யநாராயணன் உயிரிழந்து விட்டாா். தென்னிலை அருகில் பதுங்கியிருந்த பாண்டியன் கைது செய்யப்பட்டாா்.