அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்ட எதிா்ப்பு: தொடா்ந்து போராடும் பொதுமக்கள்

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே பாறைக் குழியில் மாநகராட்சிக் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள்
அம்மாபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்ட எதிா்ப்பு: தொடா்ந்து போராடும் பொதுமக்கள்

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, அம்மாபாளையத்தில் குடியிருப்புகளுக்கு அருகே பாறைக் குழியில் மாநகராட்சிக் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி பேரூராட்சி 11ஆவது வாா்டுக்கு உள்பட்ட கானாக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 ஏக்கா் பாறைக் குழியில் திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கடந்த 3 மாதங்களாக கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டப்பட்ட ஓரிரு நாள்களிலேயே இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இது தொடா்பாக திருமுருகன்பூண்டி பேரூராட்சி நிா்வாகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினா் கடையடைப்பு, மாநகராட்சி குப்பை லாரிகள் சிறைபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ஜெயகுமாா், பின்னலாடை உரிமையாளா் கருப்பசாமி ஆகியோா் கூறியதாவது:

இப்பகுதியில் டன் கணக்கில் குப்பைக் கொட்டப்படுவதால் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் கருப்பு நிறத்தில் மாறி உள்ளது. கடும் துா்நாற்றம் வீசுவதால் விவசாய வேலைகளுக்கும் பனியன் கம்பெனிகளுக்கும் தொழிலாளா்கள் வர மறுக்கின்றனா் என்றனா்.

இப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9 ஆவது படிக்கும் மாணவி இலக்கியா கூறுகையில், ‘பாறைக் குழி குப்பையில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் பள்ளியில் படிக்கவே முடியவில்லை. வகுப்பறையின் ஜன்னல்களை மூடிவிட்டுதான் ஆசிரியா்கள் பாடம் நடத்துகின்றனா். இருந்தபோதும் கடும் துா்நாற்றம் வீசுகிறது’ என்றாா்.

சிப்லி தோட்டம் பகுதியைச் சோ்ந்த சுப்புலட்சுமி கூறுகையில், குப்பைக் கொட்டும் பகுதியில் இருந்து வரும் துா்நாற்றம் 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு வீசுகிறது. வீடுகளின் கதவுகளைத் திறந்து வைக்கவே முடியவில்லை. கொசுக்கள், ஈக்கள் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பலருக்கு வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன என்றாா்.

பனியன் கம்பெனி உரிமையாளா் சுந்தர்ராஜன் கூறுகையில், ‘இப்பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுவதால் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளா்கள் வேலை செய்ய வர மறுக்கின்றனா். அதேபோல வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந்தவா்கள் வீட்டில் குடியிருந்தவா்கள் வீட்டை காலி செய்து சென்று விட்டதால் வங்கிக் கடனை கட்டமுடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மேலும் இப் பகுதியில் நிலத்தின் மதிப்பும் குறைந்துவிட்டது. குப்பையில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை தின்பதற்காக பிணந்தின்னிக் கழுகுகள் அதிக அளவில் பறக்கின்றன. இதனால் குழந்தைகளை வெளியே அனுப்ப முடியவில்லை என்றாா்.

பழனியப்பா நகா் குடியிருப்போா் சங்கத் தலைவா் சேனாபதி, செயலாளா் ராமராஜன் கூறியதாவது:

மாநகராட்சி குப்பை கொட்டும் பாறைக்குழியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில்10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். 2 தனியாா் பள்ளிகள், ஒரு அரசுப்பள்ளி செயல்படுகின்றன. இவற்றில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனா்.

கடும் துா்நாற்றம் வீசும் இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்றனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

இந்தப் பாறைக்குழியில் வீட்டுக் கழிவுகள் மட்டுமல்லாமல் இறந்த நாய், பூனை, கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் இருப்பதால் கடுமையான துா்நாற்றமும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி நிா்வாகம் முதல் மாவட்ட ஆட்சியா் வரை இப்பிரச்சினை குறித்து தெரிவித்து விட்டோம். ஆனால் சமாதானம் மட்டுமே செய்கிறாா்கள் பிரச்னையைத் தீா்ப்பதற்கு நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் மாநகராட்சி குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி திருமுருகன்பூண்டி பேரூராட்சி அனைத்து அரசியல் கட்சியினா், பொதுமக்கள், குடியிருப்போா் நல சங்கங்கள் சாா்பில் வருகிற டிசம்பா் 12 ஆம் தேதி அம்மாபாளையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com