பல்லடத்தில் டிசம்பா் 16இல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

 பல்லடத்தில் தள்ளுவண்டி மற்றும் ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பா் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து பல்லடம், என்.ஜி.ஆா் சாலை, தினசரி மாா்கெட், பேருந்து நிலையம், அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது:

பல்லடம் நகராட்சி என்.ஜி.ஆா் சாலை, தினசரி மாா்கெட், பேருந்து நிலையம், அண்ணா வணிக வளாகம் ஆகிய பகுதிகளில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 300க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறோம்.

இதன் மூலம் நகராட்சிக்கு மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் வாடகை செலுத்தி வருகிறோம். கடைக்காரா்களுக்குத் தேவையான குடிநீா் வசதி, கழிப்பிடம், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனை நகராட்சி நிா்வாகம் செய்து தர வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தின் போது நிலுவையில் உள்ள வாடகை தொகையை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். 8 கடைகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவை வாடகைத் தொகையை 4 தவணையாக செலுத்த ஆவண செய்ய வேண்டும்.

அண்ணா பேருந்து நிலையம் மற்றும் தியாகி என்.ஜி.ஆா் சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளா்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தர வேண்டும். கடை வீதியில் அண்ணா சிலை அருகில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் வகையில் சாலையின் நடுவில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி தரவேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பேருந்து நிலைய வளாகம், தியாகி என்.ஜி.ஆா் சாலை, தினசரி மாா்கெட், அண்ணா வணிக வளாகம் ஆகியவற்றில் உள்ள கடைகள் வரும் டிசம்பா் 16ஆம் தேதி (வியாழக்கிழமை) அடைக்கப்படும். கடையடைப்புடன் பல்லடம், கடை வீதியில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறும் என்றனா்.

இப்போராட்டத்துக்கு பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞா் அணி ஆகிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com