அவிநாசியில் வணிக வளாக கட்டடம் அமைக்க மண் மாதிரி பரிசோதனை
By DIN | Published On : 25th December 2021 01:42 AM | Last Updated : 25th December 2021 01:42 AM | அ+அ அ- |

அவிநாசி பேரூராட்சி பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாக கட்டடம் அமைப்பதற்காக மண் மாதிரி வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவிநாசி பேரூராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 20ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வணிக வளாக கட்டடம் பழுதடைந்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்டடம் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தினசரி சந்தையும் இடமாற்றம் செய்யப்பட்டதால் உடனடியாக நிதிஒதுக்கி வணிக வளாக கட்டடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தரைத்தளம், மேல் தளம், முதல் தளம், காா் பாா்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் வணிக வளாக கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக கோயமுத்தூா் தொழில்நுட்பக் கல்லூரி பொறியியல் பிரிவினா், அவிநாசி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் சென்றனா்.