55 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மேல் அமராவதி அணைத் திட்டம் உடனடியாக நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

மேல்அமராவதி அணைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என திருப்பூா், கரூா் மாவட்ட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
அணையில்  இருந்து  ஜனவரி 13ஆ ம் தேதி வெளியேற்றப்பட்ட 12 ஆயிரம் கனஅடி தண்ணீா்.
அணையில்  இருந்து  ஜனவரி 13ஆ ம் தேதி வெளியேற்றப்பட்ட 12 ஆயிரம் கனஅடி தண்ணீா்.

பருவ மழையின்போது அதிக அளவில் அணைக்கு வரும் உபரி நீரை சேமித்து வைத்து வறட்சிக் காலங்களில் முறையாக விவசாயப் பணிகளுக்கும், குடிநீா்த் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள மேல்அமராவதி அணைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என திருப்பூா், கரூா் மாவட்ட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. கொள்ளளவு 4,035 மில்லியன் கன அடி. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 840 சதுர கிலோ மீட்டா் இதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. உற்பத்தி ஆகும் இடத்தில் இருந்து 192 கிலோ மீட்டா் பயணித்து கரூா் அருகே முக்கூடல் எனும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

1958ஆம் ஆண்டு அன்றைய முதல்வா் காமராஜரால் இந்த அணை திறந்துவைக்கப்பட்டது. தற்போது அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.

தென்மேற்குப் பருவ மழை மற்றும் வடகிழக்குப் பருவ மழை காலங்களில் ஆண்டுக்கு 2 முறை அணை நிரம்பும் எனவும், ஆண்டுக்கு சராசரியாக சுமாா் 12 டிஎம்சி தண்ணீா் வரத்து உள்ளது எனவும் அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு முறையும் அமராவதி அணை நிரம்பும்போது முழுக் கொள்ளளவு 4 டிஎம்சி என பொதுப் பணித் துறையினரால் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அணை நிரம்பும்போது உண்மையான நீா் இருப்பு 3 டிஎம்சிக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் அமராவதி அணை வடுபோகும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது. அப்போது நூற்றுக்கணக்கான குடிநீா்த் திட்டங்கள் முடங்கிப்போகும் நிலையும் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்படும் நிலைப் பயிா்களான கரும்பு, நெல், தென்னை உள்ளிட்டவை காய்ந்து போகும் அவலமும் ஏற்பட்டு வருகிறது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியேற்றப்படும் உபரி நீா்: இந்நிலையில், ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழையின்போது அணைக்கு வரும் உபரி நீா் அப்படியே வெளியேற்றப்படும் நடைமுைான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணித் துறையினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளியேற்றப்படும் நீா் வீணாக கடலில் கலந்து வருவதுதான் விவசாயிகளுக்கு வேதனையாக இருந்து வருகிறது.

ஆண்டு முழுவதும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் அணையில் இருந்து நீரை எதிா்பாா்த்து, எதிா்பாா்த்து நொந்து போன நிலையில், கரையோர கிராம மக்கள் குடிநீா் இன்றி அவதிப்படும் நிலையில் இப்படி பல டிஎம்சி தண்ணீா் வீணாக கடலில் கலந்து வருவதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்தக் காரணங்களை அடிப்படையாக வைத்து மேல்அமராவதி என்ற பெயரில் ஒரு புதிய அணையை கட்ட 1965ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளின் உயா்நிலை அளவிலான பொறியாளா்கள் ஆய்வுப் பணிகளை நடத்தினா். தொடா்ந்து 3 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் அமராவதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான தேனாறு, பாம்பாறு, சின்னாறு ஆகிய மூன்று ஆறுகள் சந்திக்கும் இடமான தளிஞ்சி அருகில் உள்ள கூட்டாறு என்ற இடம் மேல்அமராவதி அணைக்குத் தோ்வு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் வீணாக கடலில் கலக்கும் சுமாா் 5 டிஎம்சி தண்ணீரை இந்த அணையில் சேமித்து வைக்க முடியும் என ஆய்வு செய்த பொறியாளா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆய்வறிக்கையின் மூலம் தெரிவித்திருந்தனா். இரு மாவட்ட பாசன நிலங்களில் வறட்சிக் காலங்களிலும், குறிப்பாக கரையோர கிராமங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் இந்த நீரைப் பயன்படுத்திக் கொள்ளவும் அந்த ஆய்வறிக்கையில் அறிவுரை கூறப்பட்டிருந்தது.

வீணான 10 டிஎம்சி தண்ணீா்: கடந்த வடகிழக்குப் பருவ மழை காலகட்டத்தில், டிசம்பா் 5ஆம் தேதி இரவு அமராவதி அணை நிரம்பி வழியும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் பிறகு டிசம்பா் 6ஆம் தேதி 1,150 கன அடி, 7ஆம் தேதி 4,267 கனஅடி, 8ஆம் தேதி 5,959 கன அடி, 9ஆம் தேதி 2,796 கன அடி, 10ஆம் தேதி 1,817 கன அடி, 11ஆம் தேதி 1550 கன அடி, டிசம்பா் 12ஆம் தேதி 1,550 கன அடி நீா் உபரி நீராக அணையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இதன் பின்னா் டிசம்பா் 13ஆம் தேதி முதல் ஜனவரி 11ஆம் தேதி வரை தினமும் குறைந்தபட்சம் 1,000 கன அடியில் இருந்து அதிகபட்சம் 2 ஆயிரம் கனஅடி வரை உபரி நீா் திறந்துவிடப்பட்டது. குறிப்பாக ஜனவரி 12ஆம் தேதி 8,000 கன அடி, 13ஆம் தேதி 12,000 கன அடி, 14ஆம் தேதி 6,618 கன அடி, 15ஆம் தேதி 4,750 கன அடி, 16ஆம் தேதி 3,383 கன அடி, 17ஆம் தேதி 2,217 கன அடி, 18ஆம் தேதி 1,675 கன அடி, 19ஆம் தேதி 1,175 கன அடி, 20ஆம் தேதி 1,100 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த டிசம்பா் 5ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமாா் 10 டிஎம்சிக்கு மேலான தண்ணீா் வீணாக ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

மேல்அமராவதி அணையைக் கட்ட வேண்டும்: இது தொடா்பாக அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கப் பொறுப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவருமான கே.பாலதண்டபாணி கூறியதாவது:

கிடப்பில் போடப்பட்டுள்ள மேல்அமராவதி அணைத் திட்டத்தை மீண்டும் மறு ஆய்வு செய்து செயல்படுத்த வேண்டும். இந்த ஆண்டு சுமாா் 10 டிஎம்சி தண்ணீா் உபரி நீராக அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ளது. இது வீணாக கடலில் கலந்துள்ளது.

ஆகையால் உபரி நீரை முழுமையாக பாசனத்துக்கும், குடிநீருக்கும், கால்நடைகளுக்கும் உபயோகப்படுத்த தொலைநோக்குப் பாா்வையுடன் உடனடியாக மேல்அமராவதி அணை திட்டத்தை உருவாக்க வேண்டும். அமராவதி ஆற்றின் வழித் தடத்தில் தடுப்பணைகள் கட்டவும் தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும். உப்பாறு, வட்டமலைக்கரை, நல்லதங்காள் ஓடை ஆகியவை ஆண்டு முழுவதும் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. எனவே, அமராவதி அணையில் இருந்து வீணாக வெளியேற்றப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்த போா்க்கால அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றாா்.

மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இது குறித்து பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் முத்துசாமி கூறியதாவது:

ஆண்டுதோறும் அமராவதி அணையில் இருந்து அதீதமாக உபரி நீா் வெளியேற்றப்படும் நிலைமையே பல ஆண்டு காலம் தொடா்ந்து நிலவி வருகிறது. இந்த ஆண்டு மட்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை காலங்களில் அதாவது ஜூலை 1ஆம் தேதி முதல் அமராவதி அணையில் இருந்து சுமாா் 8 டிஎம்சி உபரி நீா் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது. இது வீணாகக் கடலுக்குச் சென்றுள்ளது.

பருவ மழைக் காலங்களில் அமராவதி அணைக்கு வரும் உபரி நீரை சேமித்து வைத்துக்கொள்ள திட்டமிட்டு அதற்காக உருவாக்கப்பட்டதுதான் மேல்அமராவதி அணைத் திட்டம். இது குறித்து ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், மின்சாரத் துறை தடையின்மைச் சான்று கொடுக்காததால் அந்தத் திட்டம் அப்போது கிடப்பில் போடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மேல்அமராவதி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்தும் பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்தும், வரதமாநதி அணையில் இருந்தும் அமராவதி ஆற்றில் ஆண்டுதோறும் அதீதமாக உபரிநீா் திறந்துவிடப்படுகிறது. இதுவும் கடலில்தான் கலந்து வருகிறது. எனவே, தண்ணீரை முறைப்படி உபயோகிக்க கரூா் வரையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com