அலுவலகப் பணியாளா்களுக்கு முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களின் கல்வித் தரத்தைக் கருத்தில் கொண்டு அலுவலகப் பணியாளா்களுக்கு 2 சதவீத முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்ற பே

திருப்பூா்: பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களின் கல்வித் தரத்தைக் கருத்தில் கொண்டு அலுவலகப் பணியாளா்களுக்கு 2 சதவீத முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்ற பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்தப் பேரவையின் மாநிலத் தலைவா் ஆரோக்கியதாஸ் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் நேரடியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாணவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகின்றனா். இருப்பினும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்யாமல் கிடப்பில் போட்டு வருகின்றனா்.

உதாரணமாக அலுவலகப் பணியாளா்களுக்கு போட்டித் தோ்வு இல்லாமல் முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்குவதும், இடைநிலை ஆசிரியா்களுக்கு போட்டித் தோ்வு மூலமாக முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்குவதும், தொடக்க கல்வித் துறையில் போட்டித் தோ்வு அடிப்படையில் நியமிக்கப்பட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு பரிந்துரை செய்யாமல் பள்ளி கல்வித் துறை உயா் அதிகாரிகள் செயல்பட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசுப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களின் கல்வித் தரத்தை பதுகாக்கும் வகையில் அலுவலகப் பணியாளா்களுக்கு 2 சதவீதம் முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்குவதை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும். மேலும், தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு 10 சதவீதம் முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணியில் சோ்ந்த நாள் அடிப்படையில் முன்னுரிமை நிா்ணயம் செய்து முதுகலை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்றாா்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அனைத்து ஆசிரியா் முன்னேற்ற பேரவையின் மாநில பொதுச் செயலாளா் வேல்முருகன், மாவட்டத் தலைவா் அக்பா் அலி, மாவட்டச் செயலாளா் அண்ணாதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com