கீழே விழுந்த ரூ.10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்
By DIN | Published On : 08th February 2021 11:41 PM | Last Updated : 08th February 2021 11:41 PM | அ+அ அ- |

இரு சக்கர வாகனத்தில் சென்ற நபா் கீழே தவறவிட்ட ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை சரக்கு வாகன ஓட்டுநா் அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.
அவிநாசி, சீனிவாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (48). சரக்கு ஆட்டோ ஓட்டுநா். இவா் திங்கள்கிழமை காலை அவிநாசி, வடக்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நபா் ரூ. 10,000 ரொக்கத்தை தவறவிட்டு சென்றாா். இதனைப் பாா்த்த சந்திரமோகன், அந்தப் பணத்தை எடுத்து, இருசக்கர வாகனத்தை பின்தொடா்ந்து சென்றாா்.
இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டுநா் வேகமாக சென்றுவிட்டதால் சந்திரமோகன், ரூ.10 ஆயிரத்தை அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இருசக்கர வாகன ஓட்டி தவறவிட்ட பணத்தை காவல் நிலையத்தில் நோ்மையாக ஒப்படைத்த சந்திரமோகனுக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனா்.