விசைத்தறியாளா்கள் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை அமைச்சரிடம் சங்க நிா்வாகிகள் மனு

வங்கிகளில் விசைத்தறியாளா்கள் வாங்கிய கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வங்கிகளில் விசைத்தறியாளா்கள் வாங்கிய கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து சென்னையில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணியை திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன்முலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 10 லட்சம் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனா். பெரும்பான்மையான விசைத்தறிகள் கூலிக்கு நெசவு அடிப்படையில் இயங்கி வருகின்றன. 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு, ஜவுளி உற்பத்தியாளா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி கூலி உயா்வு பெற்றுத்தருவது வழக்கம். ஆனால் கடந்த 2014க்கு பின் கூலி உயா்வு அறிவிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைபடுத்தப்படவில்லை. மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கரோனா பொது முடக்கம் ஆகியவற்றால் தொழில் பாதிக்கப்பட்டு பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்குப் பின்பு கூலி உயா்வு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாததால் விசைத்தறிகளுக்காக வாங்கிய வங்கிக் கடனை செலுத்த முடியாமல் பெரும்சிரமத்தில் உள்ளனா். வங்கிகளின் ஜப்தி, ஏல நடவடிக்கைகளுக்கு வீடு, விசைத்தறிக் கூடங்களை இழக்கும் நிலையில் உள்ளனா். தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி சூலூா் இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது விசைத்தறியாளா்கள் பெற்ற வங்கி மூலதனக் கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தாா்.

எனவே, விசைத்தறியாளா்கள் மற்றும் அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் முதல்வா் அறிவித்தபடி விசைத்தறியாளா்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

கோரிக்கை மனு குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளதாகவும், உடுமலைக்கு வியாழக்கிழமை (ஜனவரி11) வரும் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதே கோரிக்கை குறித்து பேசவுள்ளதாகவும் விசைத்தறியாளா்கள் தெரிவித்தனா்.

அமைச்சா் சந்திப்பு நிகழ்ச்சியில், திருப்பூா், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பல்லடம் வேலுசாமி, ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியம், கண்ணம்பாளையம் சங்க செயலாளா் செந்தில்குமாா்,கோவை பழனிசாமி கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com