காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விதிகளை மீறி நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள்
By DIN | Published On : 17th February 2021 05:08 PM | Last Updated : 17th February 2021 05:08 PM | அ+அ அ- |

காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டுள்ள தனியார் வாகனங்கள்
காங்கயம்: காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விதிகளை மீறி தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வாகன நிறுத்துமிடம் இருந்தாலும், முகூர்த்த நாளில் அதிகம் பேர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு பதிவு செய்ய வருவதால், அவர்கள் வந்த வாகனத்தை வாகன நிறுத்தம் தவிர, வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் நிறுத்தி, நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலக வாகனங்கள் தவிர, பிற வாகனங்களுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைத்தாலும், அதனை யாரும் பின்பற்றுவதில்லை.
இதன் காரணமாக, வட்டாட்சியரின் வாகனத்தைக் கூட வெளியே எடுக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உதவி ஆட்சியர், ஆட்சியர்கள் வந்தால் அவர்களின் வாகனத்தைக் கூட நிறுத்த இடமில்லாத நிலையே உள்ளது. எனவே, வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முறையாக வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.