திருப்பூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 17th February 2021 10:57 PM | Last Updated : 17th February 2021 10:57 PM | அ+அ அ- |

ஊழியா்கள் இல்லாததால் வெறிச்சோடிக் காணப்படும் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகம்.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினா்.
இதில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாட்சியா் முதல் அலுவலக உதவியாளா் வரை உள்ள வருவாய்த் துறை அலுவலா்கள் 350க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வருவாய்த் துறையினா் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், ஜாதி மற்றும் வருமானச் சான்றுகள் உள்ளிட்டவை வழங்கும் பணிகள் முடக்கின. வருவாய்த் துறையினா் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதால் திருப்பூா் தெற்கு, வடக்கு, அவிநாசி, காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம் உள்பட மாவட்டத்தில் 9 வட்டாட்சியா் அலுவலகமும் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்தப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடரும் என வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.