வருவாய்த் துறை அலுவலா்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 17th February 2021 12:28 AM | Last Updated : 17th February 2021 12:28 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அலுவலா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (பிப்ரவரி 17) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் ச.முருகதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை உள்ள அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் அடிப்படை பயிற்சி மற்றும் நில அளவை பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில், திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றும் 350க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.