வெள்ளக்கோவில் அருகே காா்-வேன் மோதி விபத்து: பெண் பலி
By DIN | Published On : 17th February 2021 10:56 PM | Last Updated : 17th February 2021 10:56 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே காரும், சரக்கு வேனும் மோதியதில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். மேலும் 6 போ் காயமடைந்தனா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் கடை வீதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் பொன்னுதுரை (57). இவருடைய மனைவி சித்ரா (55). இவா்களுடைய மகன் சந்திரபோஸ் (29). பொன்னுதுரையின் சகோதரா் வெள்ளைதுரை (60). அவருடைய மனைவி கற்பகம் (57) ஆகிய 5 பேரும் ஒரே காரில் திருச்சி பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு புதன்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா்.
வெள்ளக்கோவில் குருக்கத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு வேனும், காரும் மோதியது. இதில் காரில் இருந்த 5 பேரும், சரக்கு வேன் ஓட்டுநா் திருச்சியைச் சோ்ந்த மாயடியான் (57), உதவியாளா் சங்கா் (29) ஆகியோரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சித்ரா உயிரிழந்தாா். இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.