பல்லடத்தில் புறவழிச் சாலை திட்டம்: நிலம் கையகப்படுத்த ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு
By DIN | Published On : 19th February 2021 08:38 AM | Last Updated : 19th February 2021 08:38 AM | அ+அ அ- |

எம்எல்ஏ கரைப்புதூா் ஏ.நடராஜன்.
பல்லடம் நகரில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நாகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் நகா் அமைந்துள்ளது. கோவையிலிருந்து திருச்சி, மதுரை வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் பல்லடம் வழியாகதான் சென்று வருகின்றன. நகரின் மையப் பகுதியில் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, வங்கிகள், வா்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் உள்ளன. இதனால் பல்லடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும்.
திருமணம் போன்ற சுப தினங்களில் பல்லடம், அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் வரையிலான 3 கிலோ மீட்டா் தூரத்தை கடக்க சுமாா் 45 நிமிடங்கள் வரை ஆகிறது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூா், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய ஊா்களுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் இணைவதால், பல்லடத்தில் வாகனப் போக்குவரத்து தினமும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தாா். அதனை நிறைவேற்றும் வகையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் பேரவை கூட்டத்தில் அவா் பேசினாா்.
இதையடுத்து பல்லடம் புறவழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டாா். இதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு ரூ.44.50 லட்சம் செலவில் நில அளவீடு செய்து திட்ட மதிப்பீட்டு அறிக்கை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்லடம் புறவழிச் சாலையானது மாதப்பூரில் தொடங்கி குங்குமப்பாளையம் வழியாக காளிவேலம்பட்டி பிரிவு அருகில் கோவை - திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 13.85 கிலோ மீட்டா் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.
பல்லடம் நகா் பொதுமக்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடா்ந்து இத்திட்டத்துக்கு முயற்சி மேற்கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜனுக்கும், நிதி ஒதுக்கீடு செய்து தந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்து பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் முன்பு தெற்கு ஒன்றிய செயலாளா் ஏ.சித்துராஜ், நகர செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி தலைமையில் அதிமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.