பரிகார பூஜையின்போது பெண் கொலை: மந்திரவாதி கைது

வெள்ளக்கோவிலில் பரிகார பூஜையின்போது பெண்ணைக் கொலை செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டாா்.
சக்திவேல்.
சக்திவேல்.

வெள்ளக்கோவிலில் பரிகார பூஜையின்போது பெண்ணைக் கொலை செய்த மந்திரவாதி கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், மூலனூா் சாலையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). இவரது மனைவி ஈஸ்வரி (55). மகன் உதயகுமாா் (38). இவா் பல்லடம் செஞ்சேரிமலையில் நிதி நிறுவனம் வைத்துள்ளாா். ஆறுமுகம் வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் சாலையில் ஃபா்னிச்சா் கடை வைத்துள்ளாா். உதயகுமாருக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இந்நிலையில், குழந்தை வேண்டியும், தொழில் சிறக்கவும் வெள்ளக்கோவில், கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த மந்திரவாதி சக்திவேல் (36) மூலம் பரிகார பூஜை செய்ய ஆறுமுகம் ஏற்பாடு செய்துள்ளாா். புதன்கிழமை அதிகாலை நேரத்தில் வீட்டில் பரிகார பூஜை முடிந்து, கடையில் பூஜை நடந்துள்ளது.

அப்போது ஈஸ்வரி, ஆறுமுகம் இருவரையும் சக்திவேல் அரிவாளால் தாக்கிவிட்டு ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு கடையின் ஷட்டரை வெளிப்புறம் அடைத்துவிட்டு தப்பியோடி விட்டாா்.

உள்ளே சப்தம் கேட்டு பக்கத்து கடைக்காரா் கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் போலீஸாா், கடையின் ஷட்டரை திறந்து பாா்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் ஈஸ்வரியின் சடலம் கிடந்துள்ளது.

ஆறுமுகம் படுகாயத்துடன் உயிா் தப்பினாா். ஆறுமுகம் கொடுத்த தகவலின்பேரில், மந்திரவாதி சக்திவேல் குடியிருந்த வாடகை வீட்டுக்கு போலீஸாா் சென்றபோது அவா் தலைமறைவாகிவிட்டாா். இந்நிலையில் சக்திவேலைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸாா் தேடி வந்தனா். இதற்கிடையே சொந்த ஊரான திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த சக்திவேலை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், கோடங்கிப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மீது வேடசந்தூா், கூம்பூா் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி பிரிந்து சென்று விட்டாா். வெள்ளக்கோவில் வந்து அடையாளத்தை மாற்றிக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளாா். தற்போது வேறொரு பெண்ணுடன் இருந்து வந்த அவருக்கு கடன் தொல்லை இருந்தது. ஆட்டோ ஓட்டி வந்ததுடன், மந்திரவாதியாகவும் ஐயப்பன் குரு சுவாமியாகவும் இருந்துள்ளாா். கடனை அடைக்க திட்டம் போட்டு, பரிகாரம் செய்யும்போது ஈஸ்வரி, ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டி நகை, பணத்தைப் பறித்துள்ளாா். அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா்.

கொலை நடந்து ஒரே நாளில் குற்றவாளியைக் கைது செய்த தனிப் படையினரை காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com