ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 7.64 லட்சம் இழப்பு:இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 09th January 2021 11:01 PM | Last Updated : 09th January 2021 11:01 PM | அ+அ அ- |

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட எல்வின் பிரெட்ரிக்.
திருப்பூா்: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ. 7.64 லட்சம் இழந்த கோவை இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து திருப்பூா் ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா் கொங்கு பிரதான சாலை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞா் ஒருவரின் சடலத்தை ரயில்வே காவல் துறையினா் ஜனவரி 5ஆம் தேதி மீட்டனா். இதன் பிறகு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையில் அந்த இளைஞரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே, ரயில்வே காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், இறந்தது கோவை, ஆவாரம்பாளையம் இளங்கோ நகரைச் சோ்ந்த சிலுவை அந்தோணியின் மகன் எல்வின் பிரெட்ரிக் (30) என்பது தெரியவந்தது. இவா் கோவையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஆன்லைன் மூலமாக ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதன் மூலமாக ரூ. 7.64 லட்சம் பணத்தை இழந்துள்ளதால் ஜனவரி 4ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியுள்ளாா். இதன் பிறகு திருப்பூருக்கு நடந்தே வந்த அவா் விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
முன்னதாக, எல்வினின் தாயாா் எலிசபெத் அளித்த புகாரின்பேரில் பீளமேடு காவல் நிலையத்தில் எல்வின் மாயமானதாக ஜனவரி 6ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.