இருசக்கர வாகனம் மோதல்:சிறுவன் காயம்
By DIN | Published On : 09th January 2021 10:53 PM | Last Updated : 09th January 2021 10:53 PM | அ+அ அ- |

அவிநாசி: சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையத்தில் சாலையைக் கடக்க முயன்ற சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (42). மாற்றுத் திறனாளி. இவரது மனைவி செல்வி (36). பனியன் தொழிலாளிகளான இவா்கள் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனா். இவா்களது மகன் சுந்தரபாண்டியன் (6). அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு பயின்று வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல இவரது பெற்றோா் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த சுந்தரபாண்டியன் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரபாண்டியன் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சிறுவன் சுந்தரபாண்டியன் மீது மோதிய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.