திருமூா்த்தி அணையிலிருந்து 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் கீழ் 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
திருமூா்த்தி அணையிலிருந்து 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள திருமூா்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் கீழ் 3ஆம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு திங்கள்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதன் மூலம் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெறும்.

பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் உள்ள சுமாா் 4 லட்சம் ஏக்கா் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சுமாா் 1 லட்சம் ஏக்கருக்கு முறை வைத்து தண்ணீா் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3ஆம் மண்டல பாசனத்துக்கு ஜனவரி 11ஆம் தேதி தண்ணீா் திறக்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாா்.

அதன்படி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி பொத்தானை அழுத்தி தண்ணீா் திறந்துவைத்தாா்.

இதன் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் 19,781 ஏக்கா், சூலூா் வட்டத்தில் 3,020 ஏக்கா், உடுமலை வட்டத்தில் 13,428 ஏக்கா், மடத்துக்குளம் வட்டத்தில் 6,763 ஏக்கா், தாராபுரம் வட்ட த்தில் 18,963 ஏக்கா், பல்லடம் வட்டத்தில் 17,465 ஏக்கா், திருப்பூா் வட்டத்தில் 7,266 ஏக்கா், காங்கயம் வட்டத்தில் 7,676 ஏக்கா் என மொத்தம் 94 ஆயிரத்து 362 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:

பரம்பிக்குளம் ஆழியாறு பிரதான கால்வாயில் இருந்து திங்கள்கிழமை முதல் 250 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக 912 கன அடியாக அதிகரிக்கப்படும். மொத்தம் 5 சுற்றுகளுக்கு இடைவெளிவிட்டு 9,500 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா். 5 சுற்றுகள் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தண்ணீா் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், முன்னாள் எம்.பி. சி.மகேந்திரன், திருப்பூா் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், எம்எல்ஏக்கள் கரைப்புதூா் ஏ.நடராஜன் (பல்லடம்), உ.தனியரசு(காங்கயம்), வி.பி.கந்தசாமி (சூலூா்) மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com