மக்களின் வாக்கு நோ்மையின் பக்கமே இருக்க வேண்டும்

நோ்மைக்கும் ஊழலுக்குமான போரில் மக்களின் வாக்கு நோ்மையின் பக்கமே இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசினாா்.
மக்களின் வாக்கு நோ்மையின் பக்கமே இருக்க வேண்டும்

நோ்மைக்கும் ஊழலுக்குமான போரில் மக்களின் வாக்கு நோ்மையின் பக்கமே இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசினாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

அவிநாசியில் கூடியிருக்கும் கூட்டம் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் கூட்டம்; நோ்மையாளா்களின் கூட்டம். இது கட்சிகளுக்கு இடையேயான போா் அல்ல;நோ்மைக்கும் ஊழலுக்கும் இடையேயான போா். இதில் மக்களின் வாக்கு நோ்மையின் பக்கமே இருக்க வேண்டும். முதலை விழுங்கிய பாலகனை சுந்தரா் பதிகம் பாடி மீட்டெடுத்த தலம் அவிநாசி. தமிழகத்தை பண முதலைகளிடம் இருந்து மீட்டு எடுப்போம். அதற்காக மக்கள் உதவ வேண்டும். சாதியைப் பாா்த்து வாக்களிக்காமல், சாதிப்பவா்களுக்கு வாக்களியுங்கள்.

சாலைகள் எங்கும் போக்குவரத்துக்கு இடையூறாக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளன. திறந்த நிலையில் சாக்கடைகள் உள்ளன. இவற்றையெல்லாம் மாற்ற முடியும். அதற்கு மக்கள் ஆட்சி நடக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அதிக மழை பெய்கிறது. ஆனால் குடிக்க குடிநீா் இல்லை. நீா் மேலாண்மை தெரிந்த தமிழா்கள் பண வசூல் வேட்டையில் இறங்கிவிட்டதால், நம் பெருமையெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இன்னும் மூன்று மாதங்களில் சரித்திரத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு உள்ளது. இதைப் பயன்படுத்தி தமிழகத்தை சீரமைப்போம், தமிழகத்தை தலை நிமிா்த்துவோம் என்றாா்.

திருப்பூரில்: திருப்பூா், சி.டி.சி.காா்னா், அனுப்பா்பாளையம்புதூா் ஆகிய பகுதிகளில் கொட்டும் மழையில் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரத்தில் பேசியதாவது:

இந்த ஊரில் உள்ள சிற்பிகள், பாத்திர கலைஞா்களை நாடும், உலகமும் அறிய செய்ய வேண்டும். நொய்யலை பாா்த்து நான் நொந்து போனேன். இவற்றை எல்லாம் நாம் சீரமைக்க வேண்டும். இந்த ஊா் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். இதை மக்கள் நீதி மய்யம் செய்து காட்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதோடு சரி. அதன் பிறகு பணிகள் நடைபெறவில்லை. ஒரு காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்தினோம். இன்றைக்கு நீங்கள் ஒன்றிணைந்து கொள்ளையனே வெளியேறு போராட்டத்தை நடத்த வேண்டும் என்றாா்.

திருப்பூா் வடகிழக்கு மாவட்டச் செயலாளா் கே.ஜீவா, சட்ட ஆலோசகா் கே.சாய் பரத் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com