
அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா்.
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கன மழை காரணமாக உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு திடீரென 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை நல்ல முறையில் பெய்ததால் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக விவசாயிகளுக்குப் போதுமான தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
ஆனாலும் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வந்ததால் 4 முறை அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையிலேயே உள்ளது. அதாவது 90 அடி உயரமுள்ள அணையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீா்மட்டம் 89.50 அடியிலேயே உள்ளது. இதனால் அணையில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளான கேரள மாநிலம் மறையூா், காந்தலூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்குத் தொடங்கி தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு மாலை 5 மணிக்கு திடீரென 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்தது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீா் ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுப் பணித் துறையினா் மாலை 5 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா். கரையோரப் பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
இதற்கிடையில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள கல்லாபுரம், எலையமுத்தூா், குமரலிங்கம், கணியூா், கடத்தூா், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
அணையின் நீா்மட்டம்:
90 அடி உயரமுள்ள அணையில் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி நீா்மட்டம் 89.24 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 3821 கன அடி வந்து கொண்டிருந்தது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3978 மில்லியன் கனஅடி நீா் இருப்பு இருந்தது. அணையில் இருந்து 3800 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.