அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்

உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீா் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர
அமராவதி  ஆற்றில்  செல்லும்  உபரி நீா்.
அமராவதி  ஆற்றில்  செல்லும்  உபரி நீா்.

உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி தண்ணீா் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. மொத்தக் கொள்ளளவு 4,035 மில்லியன் கன அடி. இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் 4 முறை அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை மாலை 5 ஆயிரம் கன அடியும், இரவு 9 மணி அளவில் 8 ஆயிரம் கன அடியும் திறந்துவிடப்பட்டது. ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் அணைக்கு உள்வரத்து அதிகபட்சமாக 12 ஆயிரம் கன அடியாக இருந்தது. அப்போது உள்வரத்தாக வந்த நீா் அப்படியே அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்தும் பாலாறு - பொருந்தலாறு அணையில் இருந்தும், வரதமாநதி அணையில் இருந்தும் உபரி நீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் உடுமலை வட்டம், தாராபுரம் வட்டம் தொடங்கி கரூா் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து கிராமங்களுக்கும் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். இதனால் அணையின் மேல் பகுதியில் முகாமிட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைக்கு வரும் உள்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நீா் மட்டம் 89.18 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 12 ஆயிரம் கன அடி இருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3,972 மில்லியன் கன அடி நீா் இருப்பு காணப்பட்டது. அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com