பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்

வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கயத்தில் விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கடை அடைப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒரு பகுதியினர்
காங்கயத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒரு பகுதியினர்

காங்கயம்: வெள்ளகோவில் பிஏபி கிளை வாய்க்காலில் முறையாக தண்ணீர் விட வலியுறுத்தி காங்கயத்தில் விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கடை அடைப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காங்கயம், கோவை சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காங்கேயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில், பங்கேற்றவர்கள் பேசியதாவது:

பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க்காலில் வரவேண்டிய தண்ணீரை பிஏபி நிர்வாகம் முறைகேடாகப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் முறையிட்டும், போராட்டமும் நடத்தியுள்ளோம். பலன் எதுவும் இல்லை.

சமச்சீர் பாசனம் என்று பெயரளவில் வைத்துக் கொண்டு, நமது கிளைக்குத் தேவையான தண்ணீரை பிஏபி நிர்வாகம் கொடுப்பதில்லை. அவர்கள் நமக்குத் தேவையான தண்ணீரையும் அணையில் இருந்து எடுக்கிறார்கள். ஆனால், அதை நமது பாசனத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதில்லை. இந்தத் தண்ணீர் இடையிலேயே முறைகேடாக விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே, பிஏபி பாசன தண்ணீர் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கடைமடைப் பகுதியான வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளுக்கு உரிய தண்ணீரை முறையாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கடை அடைப்பு : விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, செவ்வாய்க்கிழமை காங்கயத்தில் கடையடைப்பு நடைபெற்றது. இதன் காரணமாக, காங்கயம் பகுதியில் மெயின்ரோடு, திருப்பூர் ரோடு, சென்னிமலை ரோடு, கரூர் ரோடு, தாராபுரம் ரோடு, கோவை ரோடு, சென்னிமலை ரோடு மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவகங்கள், எலெக்ட்ரிக் கடைகள், ஜவுளிக் கடைகள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

வங்கிகள், பள்ளிகள், பெட்ரோல் பங்குகள், மருந்துக் கடைகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com