திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தமிழக அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடா்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞா்களுக்கு தமிழக அரசு சாா்பில் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ. 600 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

அதே போல, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 750, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினா் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு இல்லை. மேலும், மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும், முற்றிலும் வேலைவாய்ப்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை (ஸ்மாா்ட் காா்டு), தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களையும் இணைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா், அறை எண் 438, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மனுதாரா் ஏற்கெனவே உதவித் தொகை பெற்றிருந்தாலோ அல்லது பெற்று வருபவராக இருந்தால் விண்ணப்பிக்கத் தகுதியில்லை. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com