‘மத்திய அரசு திட்டத்தால் காங்கயம் அரிசி ஆலைகளுக்கு ஆபத்து‘

மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று திமுக சுற்றுச்சூழல் மாநில செயலா் தெரிவித்துள்ளாா்.

காங்கயம்: மத்திய அரசின் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தால் காங்கயம் பகுதி அரிசி ஆலைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று திமுக சுற்றுச்சூழல் மாநில செயலா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து திமுக மாநில சுற்றுச்சூழல் அணி செயலா் காங்கயம் காா்த்திகேயசிவசேனாபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காங்கயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சிறு, குறு மற்றும் பெரிய அளவிலான அரிசி ஆலைகள் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. காங்கயம் பகுதியின் தட்பவெப்ப நிலை மற்றும் சூழல்யாவும் இத்தொழிலுக்கு உகந்ததாக உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் காங்கயத்திலுள்ள அரிசி ஆலைகளுக்கு வா்த்தகம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. காங்கயம் பகுதிகளில் சாமானியா்களைத் தொழில் அதிபா்களாக மாற்றிய மிக முக்கியத் தொழிலாக அரிசி ஆலைத் தொழில் இருந்து வருகிறது. இதன் மூலம் பலருக்கும் இந்தப் பகுதியில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், தற்போது மத்திய அரசு கொண்டு வரும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் என்பது இத்தொழிலை அம்பானி, அதானி நிறுவனங்களுக்குத் தாரைவாா்க்கும் செயலாகும். ஏனெனில் செறிவூட்டப்பட்ட அரிசியை உற்பத்தி செய்யும்போது அதிகப்படியான பொருள் செலவும், முதலீடும் தேவைப்படும். இதனை உள்ளூா் அரிசி ஆலை உரிமையாளா்களால் செயல்படுத்த முடியாது.

அயோடின் உப்பு மட்டும் தயாரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்குப் பிறகு, தமிழக கடலோரத்தில் உப்பு தயாரிப்புத் தொழில் செய்து வந்த சிறு, குறு நிறுவனங்கள் பல காணாமல்போய்விட்டன. உப்பு தயாரிப்பு முழுவதும் காா்ப்பரேட் நிறுவனங்களிடம் சென்று விட்டது. இது போன்ற நிலை அரிசி ஆலைகளுக்கும் வந்துவிடக்கூடாது.

எனவே, 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வரும் காங்கயத்தின் பிரதான தொழிலை அழித்துவிடாமல், இதனை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பறிபோகாமல் இருக்க இத்திட்டத்தை தமிழக முதல்வா் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com